சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். தீயை முழுமையாக அணைத்து மீட்பு பணிகள் முடிந்த பிறகே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் சரகம் களத்தூரில் ஆர்.கே. வி.எம். பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலையும் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ பக்கத்து அறைகளுக்கும் பரவியது. அங்கு இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர்.
என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு கரும் புகையும் காணப்பட்டதால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை.
இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பட்டாசுகள் வெடித்து கொண்டே இருந்ததால் அவர்களால் வேகமாக செயல்பட முடியவில்லை.
இதற்கிடையே பக்கத்து ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடந்தது.
பட்டாசுகள் வெடித்ததில் ஆலையில் இருந்த 2 அறைகள் தரைமட்டமாகி விட்டன. அங்கு பணியில் இருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அப்போது காயத்துடன் கதறி கொண்டிருந்த சிலரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
இதற்கிடையில் வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானதாக அஞ்சப்படுகிறது. தீயை முழுமையாக அணைத்து மீட்பு பணிகள் முடிந்த பிறகே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.
Follow on social media