தீவிரமடையும் மக்கள் போராட்டம் – தப்பியோடத் தயாராகும் முக்கியஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. மேலும் இதனால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டை விட்டு பல பிரபல்யங்கள் வெளியேறவேண்டும் என்ற கோஷத்துடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றார்கள்.

இதேவேளை, காவல்துறையை விட்டு அடித்து விரட்டி, கைதுசெய்து, அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தி, சதிகள் பல செய்து… பல பிரயத்தனங்களை மேற்கொண்டும், மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையையும் கைவிடவேயில்லை.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கூட தமது சீருடைகளுடனேயே மக்கள் முன் தோன்றி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவருவதானது மக்கள் போராட்டத்தின் வீரியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

குறிப்பிட்ட ஒரு குடும்பம் தனது அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்குடன் செய்த பல அரசியல் நகர்வுகளுக்கு எதிர்க்கட்சிகளும் இம்முறை துணைபோகவில்லை.

ஆழும் கட்சியினுள்ளேயும் என்றுமில்லாதவாறான சலசலப்புக்கள்… எதிர்ப்புக்கள்.

ஐ.எம்.எப். இடம் இருந்தும் நல்ல சமிஞ்ஞைகள் வருவதாகத் தெரியவில்லை.

இப்படியான கையறுநிலையில், குறிப்பிட்ட ஒரு முக்கியஸ்தர் ஆட்சி அதிகாரத்தைவிட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

ஆட்சியை விட்டுவிடும் மனநிலைக்குவந்துவிட்ட அவர், நாட்டை விட்டும் வேளியேறத் தயாராகிவருவதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சில முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஏற்கனவே போர்க்குற்ற விசாரணைகள், தடைகள் மேற்குலகில் இருக்கின்ற நிலையில், மேற்குலகிற்கு செல்வது அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என்று சிலர் அவரை எச்சரித்துள்ளார்கள்.

தற்பொழுது அமைதிகாத்துவரும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள், குறிப்பிட்ட அந்த நபர் மேற்குலகம் வந்துசேர்ந்ததும் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் இருப்பதாக எச்சரிக்கும் அந்த ஆலோசகர்கள், மேற்குலக நாடு ஒன்றிடம் இருந்து உத்தரவாதத்தைப் பெற்றபின்னரே நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

அந்த உத்தரவாதத்தைப் பெறும் நடவடிக்கைகளில் தற்பொழுது மும்முரமாக அந்த முக்கியஸ்தர்கள் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மேற்குலகின் உத்தரவாதம் கிடைப்பதற்கு தாமதமானால், ஆபிரிக்க நாடான உகண்டாவுக்கு சென்று அங்கு சிறிது காலம் தங்கியிருப்பதற்கான சில நகர்வுகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன.

குறிப்பிட்ட இந்த முக்கியஸ்தருக்கு நெருக்கமான ஒருவர் உகன்டாவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அவர் ஊடாக அந்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன.

எதிர்வரும் திங்கட்கிழமை (18-04-2022) குறிப்பிட்ட அந்த முக்கியஸ்தரின் உகாண்டா பயணம் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டு வருவதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOW Premium Web Hosting