பாரிஸ் நகரில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு முன்பாகச்-செய்ன் நதியின் மறு பக்கத்தில்-பிளாஸ்-து-லா கொன்கோட் (La place de la Concorde) சதுக்கத்தில் அணி திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஓய்வூதிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலீஸார் நேற்றிரவு பலப் பிரயோகம் மூலம் வெளியேற்றியுள்ளனர். எனினும் அவர்களில் ஒரு பகுதியினர் அங்கு தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.
சுமார் ஆறாயிரம் பேர் அங்கு ஒன்று கூடி அரசு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அங்கிருந்து கொன்கோட் பாலம் ஊடாக நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறுவதைத் தடுப்பதற்காகப் பெரும் எண்ணிக்கையான பொலீஸார் மற்றும் கலகம் அடக்கும் படையினர் பாலத்தின் வாயிற் பகுதியில் குவிந்திருந்தனர். அவர்களுக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே நேருக்கு நேரான மோதல் நிலைமை காணப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சதுக்கத்தில் ஆங்காங்கே தீ மூட்டினர்.
பொலீஸார் மீது கற்கள், போத்தல்களை வீசித் தாக்கினர். பதிலுக்குப் பொலீஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்தும் தண்ணீர்ப் பீரங்கிகளைப் பயன்படுத்தியும் அரச எதிர்ப்பாளர்களை அடித்து விரட்டினர். அங்கு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 217 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ் – து-லா-கொன்கோட் பகுதியில் அமைந்துள்ள சிலை ஒன்றின் மறுசீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்ற தளத்தில் தீ மூண்டதன் காரணமாகவே அங்கிருந்து மக்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. -இவ்வாறு நேற்றைய பொலீஸ் நடவடிக்கைக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு நடைபெற்று வருகின்ற திருத்த வேலைகளைக் காரணம் காட்டி கொன்கோட் பகுதியில் மக்கள் ஒன்று கூடுவதைப் பொலீஸ் தலைமையகம் முதலில் தடை செய்திருந்தது. ஆனால் மக்கள் ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பைக் கட்டுவதற்கான பிரத்தியேக இடம் அது என்பதைக் குறிப்பிட்டு நீதிமன்றம் ஒன்று மக்கள் அங்கு கூடுவதை அனுமதித்திருந்தது.
ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தை 49.3 ஊடாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப் போவதாகப் பிரதமர் எலிசபெத் போர்ன் அறிவித்ததை அடுத்தே பாரிஸில் நேற்று மாலை நாடாளுமன்றத்துக்கு முன்பாக அமைந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிளாஸ்-து-லா-கொன்கோட் (Place de la Concorde) சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டனர். தீவிர இடது சாரித் தலைவர் ஜீன் லூக் மெலன்சோன் உட்பட பல எதிரணி அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கங்களது பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதேபோன்று நாடெங்கும் முக்கிய நகரங்களில் அரச நிர்வாக கட்டடங்கள் மற்றும் பொலீஸ் தலைமையகங்கள் முன்பாக நேற்று மாலை முதல் மக்கள் கூடி சிறிய அளவிலான எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடக்கியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் கொன்கோடில் திரண்டவர்களைப் பொலீஸார் அங்கிருந்து வெளியேற்றிய பின்னர் நகரின் ஏனைய சில இடங்களில் வீதி வழிமறிப்பு மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் சில பதிவாகி உள்ளன.
அரசமைப்பின் 49.3 விசேட அதிகாரத்தை அரசு பயன்படுத்தப் போகிறது என்ற செய்தி வெளியாகிய கையோடு நாட்டின் வேறு சில பகுதிகளிலும் ஆங்காங்கே அதற்கு எதிரான கூட்டத்தினர் வன்முறைச் சம்பவங்களில் இறக்கினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக வழிமுறையையும் , நாட்டு மக்கள் சமூகத்தின் ஜனநாயகக் குரலையும் புறந்தள்ளிவிட்டு அரசு எடுத்துள்ள தன்னிச்சையான முடிவை கடுமையாகக் கண்டித்துள்ள தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, புதிய பேரணிகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்குமாறு தொழிலாளர் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒன்பதாவது கட்ட வேலை நிறுத்தமும் வீதிப் பேரணிகளும் வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரும்பான்மையை நிரூபிக்க வழியின்றி அரசமைப்பின் 49.3 விசேட அதிகாரத்தைக் கையில் எடுக்கின்ற சந்தர்ப்பங்களில், அந்த அரசைக் கவிழ்ப்பதற்கான நம்பிக்கை கோரும் பிரேரணை ஒன்றை அடுத்த 24 மணி நேரத்துக்குள் சபையில் சமர்ப்பிப்பதற்குச் சட்டத்தில் இடம் உண்டு. பிரதான எதிர்க்கட்சியான மரின் லூ பெனின் தீவிர வலதுசாரிக் கட்சி அதற்கான முயற்சியைத் தொடக்கி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு முன்னராக அந்தப் பிரேரணை மன்றில் முன்வைக்கப்பட வேண்டும்.
Follow on social media