கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் மீது தென் கொரிய பொலிஸார் இன்று முற்றுகைகளை நடத்தியுள்ளனர்.
தென் கொரிய மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் வைத்தியசாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.
சுமார் 10,000 கனிஷ்ட மருத்துவர்கள் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக கனிஷ்ட மருத்துவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்கள் நேற்று வியாழக்கிழமைக்கு (பெப் -29)முன்னர் பணிக்குத் திரும்ப வேண்டுமென தென் கொரிய அரசாங்கம் காலக்கெடு விதித்திருந்தது. பணிக்குத் திரும்பியவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகள் எதுவும் இல்லை என தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை , பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றன்ர என யோன்ஹாப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மருத்துவர்களின் பணிப் பகிஷ்கரிப்பால் கடந்த வாரம் 15 பெரிய வைத்தியசாலைகளில் திட்டமிடப்பட்டிருந்த 50 சதவீதமான சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டதாக தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Follow on social media