பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதால், அங்கு வசித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கராச்சி நகரில் இதுவரை இல்லாத அளவில் கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழையால், நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையானது, கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவாகும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow on social media