சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு சமீபத்தில் ஜெயிலுக்கு சென்று வந்த நடிகை மீரா மிதுன், படப்பிடிப்பில் இருந்து ஓட்டம் பிடித்து இருக்கிறார்.
`குளோபல் எண்டர்டெயின்மெண்ட்’ பட நிறுவனம் சார்பில், ‘பேய காணோம்’ என்ற பேய் படம் தயாராகி வந்தது. அந்த படத்தில் மீரா மிதுன் பேயாக நடித்து வந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, செல்வ அன்பரசன் டைரக்டு செய்கிறார். தேனி பாரத், சுருளிவேல் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. இந்தநிலையில், பேயாக நடித்துவந்த மீராமிதுன் திடீரென்று மாயமாகி விட்டார். இதுகுறித்து டைரக்டர் செல்வ அன்பரசன் கூறியதாவது:-
‘‘இது ஒரு நகைச்சுவையான பேய் படம். 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. இதற்காக கொடைக்கானலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தோம். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு முடிய 2 நாட்களே இருந்த நிலையில், திடீரென்று மீரா மிதுன் மாயமாகி விட்டார். அவருடைய உதவியாளர்கள் 6 பேர்களையும் காணவில்லை. அவர்களின் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். பேயை தேடப்போன நாங்கள் கதாநாயகியை தேட வேண்டியதாகி விட்டது. இத்தனை பேர் உழைப்பை மதிக்காமல், மீரா மிதுன் மாயமாகி விட்டார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறோம்.’’ என்றார்.
Follow on social media