அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மன்னாரிலும் ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொரோனா பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்றைய தினம் (5) காலை மன்னார் நகர் மற்றும் முருங்கன் பகுதியில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர்,சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும், முருங்கன் பேருந்து தரிப்பிட பகுதியிலும் ஒரே நேரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த கண்டன போராட்டம் இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்,தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு,தமிழ் அரசியல் கைதிகள் பயங்கர வாதிகள் இல்லை, எமது உறவுகளை சிறையில் மடிய விட வேண்டாம் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் ஊடகங்கள் முன்பாக வாசிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting