தனது இரண்டு வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மின்ஹத் லமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார்.
இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சிறுமி மின்ஹத் லமியின் குடும்ப பின்னணி
மின்ஹத் லமி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.
இவரது தந்தை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். தாய் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதி வருடத்தில் கல்வி கற்று வருகின்றார்.
மின்ஹத் லமியின் தந்தை தனது குழந்தையின் சாதனை பற்றி கருத்து தெரிவிக்கும் போது, “பிறந்த குழந்தைகளின் கைகளில் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக ஸ்மார்ட் போன்களை திணித்து மகிழும் பெற்றோருக்கு மத்தியில் நான் எனது குழந்தைக்கு நிறங்கள், பழங்கள், இலக்கங்கள், வடிவங்கள், எழுத்துக்கள் மற்றும் பொது அறிவு தகவல்களையும், அது தொடர்பான எளிய செயல்முறைகளையும் கற்றுக் கொடுத்ததுடன் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டு இன்று எனது குழந்தையை ஒரு சாதனை குழந்தையாக மாற்றியுள்ளேன்” என்றார்.
சிறுமி மின்ஹத் லமியின் திறமைகள்
மின்ஹத் லமி தனது பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை கவனமாகச் செவிமடுத்து மனனம் செய்வதுடன், ஞாபகத்திலும் வைத்து கொள்வார்.
இவர் ஏதாவது ஒரு பொருளையோ, ஒரு இடத்தையோ அவதானித்தவுடன் அது பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டக் கூடியவர். அதனை அறிந்து கொண்டு சில நாட்களுக்கு பின்னர் அப்பொருள் பற்றியோ அவ்விடயம் பற்றியோ தானாகவே சொல்லக் கூடிய திறமை அவரிடம் உண்டு.
மேலும், 300 இற்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை தெளிவாக சொல்லக் கூடிய திறமையுள்ளவர். தமிழ் அகரவரிசையிலுள்ள 247 எழுத்துகளையும் மிக வேகமாக சொல்லக் கூடியவர்.
அத்துடன் மாதங்கள், வாரங்கள், நிறங்கள், பழங்கள், வடிவங்கள், உடல் உறுப்புகளின் பகுதிகள், பறவைகள், இலக்கங்கள், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் அதற்கான சொற்களையும் ஒழுங்குவரிசையாகவும், வரிசை இல்லாமலும் மிக வேகமாக சொல்ல கூடிய திறமை இவரிடம் உண்டு.
இவை தவிர பொதுஅறிவு உள்ளிட்ட விடயங்கள், 100 இஸ்லாமிய கேள்விகளுக்கான பதில்களை சொல்லக் கூடியவர். தற்போது அல்குர்ஆனின் பல சூறாக்களையும் மனனம் செய்து வருகிறார்.
இந்த சிறுமி எதிர்காலத்தில் கல்வித் துறையிலும், ஏனைய துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகளை பெற்று எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையை தேடித் தரக் கூடிய ஒருவராக மிளிர வேண்டும் என்று பலரும் வாழ்த்துகின்றனர்.
Follow on social media