மின் தடைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை – விசாரணை ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (09) மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை முறையாக மீட்டெடுத்ததுடன், நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை மின்சார சபை நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை நீர் விநியோகமும் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக விக்டோரியா, பொல்கொல்ல, ரன்தெனிகல மற்றும் ரன்டேம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக இதுபோன்ற மின்தடை ஏற்பட்டடிருந்தது.

மேலும் 2020 ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கெரவலப்பிட்டியவில் மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 06 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

மேலும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் திகதி கொத்மலை மற்றும் பியகம மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன், அவ்வாறான மின் தடைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் நேற்று சுமார் 6 மணித்தியாலங்கள் திடீரென மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று அத தெரணவிடம் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply