வருட இறுதி விருந்துபாசாரத்தில் கலந்து கொள்ளாத 7 பெண் பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்தியுள்ளார் கரைச்சி பிரதேசசபை தவிசாளர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 7 யுவதிகளும் மிகவும் பின்தங்கிய, வறுமைப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள். தமக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீருடன் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேசசபையின் வருட இறுதி கொண்டாட்டம் பரந்தனிலுள்ள ஸ்டார் ரெஸ்ட்ரோரன்டில் சில தினங்களின் முன்னர் நடைபெற்றது. பிரதேசசபையில் பணியாற்றி இடமாற்றம் பெற்ற 3 பணியாளர்களை அங்கு கௌரவிப்பதாகவும் பிரதேசசபை தவிசாளர் அறிவித்திருந்தார். வருட இறுதி கொண்டாட்டங்கள், களியாட்டங்களை நிறுத்துமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியிருந்த நிலையில், அதை மீறி விருந்துபசாரம் நடந்தது. அத்துடன், விதிமுறைகளை மீறி பெருமளவானவர்கள் கூடும் ஏற்பாடும் செய்யப்பட்டது. அங்கு 115 பேரிற்கான உணவுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஸ்டார் ரெஸ்ட்ரோரன்றின் முன்பகுதியில் மதுபான விடுதி உள்ளது. பின்பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. சாதாரண பின்தங்கிய கிராம மக்களிற்கு ஸ்டார் என்றதும் மதுபான விடுதியை மட்டும் உருவகப்படுத்துவதில் ஆச்சரியமில்லை.
கரைச்சி பிரதேசசபையில் ஆதன வரி அறவீட்டிற்காக அமைய அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களான 7 யுவதிகளின் பெற்றோர், அந்த விடுதிக்கு விருந்துபசாரத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், 7 பெண் பணியாளர்களும் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“விருந்துபசாரத்தின் பின்னர் நாம் அலுவகத்திற்கு சென்றோம். எம்மை அழைத்த தவிசாளர் வேலமாலிகிதன், ஏன் விருந்தில் கலந்துகொள்ளவில்லையென கேட்டார். பெற்றோர் எம்மை அந்த விடுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லையென்பதை சொன்னோம். எங்களை வேலையிலிருந்து நிறுத்தி விட்டார்“ என தெரிவித்துள்ளனர்
Follow on social media