ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் வசித்து வரும் உக்ரைனியர்கள், ஜப்பானியர்கள், ரஷியர்கள் ஒன்றிணைந்து, உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவை சுற்றி வளைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகளும் சண்டையிட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததால் பொதுமக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. எனினும் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இப்போது இல்லை.
இது ஒருபுறமிருக்க ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராகவும், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாகவும் உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டம் நடத்தியவண்ணம் உள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உக்ரைனுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் நடத்தினர். டோக்கியோ நகரில் வசித்து வரும் உக்ரைனியர்கள், ஜப்பானியர்கள், ரஷியர்கள் ஒன்றிணைந்து, உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அப்போது புதின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்
உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜியார்ஜியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டுத் தலைநகர் டிபிசிலியில் பெருந்திரளாக கூடிய மக்கள் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க மறுத்த ஜார்ஜிய நாட்டுப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கண்டனக் குரல்கள் எழுப்பினர்.
அர்ஜென்டினாவில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். காலையில் எழும்போதே வெடிகுண்டு சப்தத்துடன் கண் விழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைன் கொடியுடன் ரஷியாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இப்போராட்டம் அர்ஜென்டினா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், மெக்சிகோ, பெரு உள்ளிட்ட பல நாடுகளைச் சார்ந்த மக்களும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் உக்ரைனுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிட்னி நகரில் ரஷியாவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். உக்ரைன் நாட்டு தேசியக் கொடியை கைகளில் ஏந்தி, உக்ரைன் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் புதினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி மக்கள் பேரணி நடத்தினர்.
Follow on social media