இலங்கை தமிழரசுக் கட்சி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரத்தியேகமாக கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்று முற்பகல், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்து, குறித்த கடிதத்தை கையளிக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தக் கடிதத்தை கையளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில், இன்றைய தினம் கையொப்பமிட உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டிய விடயங்களை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம், முன்னதாக கடிதத்தைக் கையளிததுள்ளது.
இந்த நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளும், இந்தியப் பிரதமருக்கு பிரத்தியேகமாக கடிதங்களை அனுப்பவுள்ளன.
Follow on social media