பொலிஸ் அதிகாரியாக நடித்து 17 வயது யுவதி உடன் குடும்பம் நடத்திய இராணுவச்சிப்பாய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக வேடமிட்டு 17 வயது யுவதியை காதலித்து, குடும்பம் நடத்தி விட்டு, கைவிட்டு தலைமறைவான இராணுவச்சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் ஏமாந்த நயன்தாரா என்ற 17 வயது யுவதிக்கு, தனது காதலன் திருமணமாகி 2 பிள்ளைகளும் இருக்கும் விடயம் இப்போதுதான் தெரிய வந்து, அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இந்த ‘தில்லாலங்கடி’ காதலன் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவச் சிப்பாயாக பணிபுரிந்து கொண்டு, பொலிஸ் ஓஐசியாக சீருடை அணிந்து நயன்தாராவுடன் குடும்பம் நடத்தியதுடன், ‘ஒரு இராத்திரி ஒரு காதலி போதுமா?’ என பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய மன்மதன் பற்றிய செய்தித் தொகுப்பு இது.

பொலன்னறுவை விலயாய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் அவர். பாடசாலைக் கல்வி முடித்ததும் இராணுவத்தில் சேர்ந்தார். பாடசாலை காலத்திலிருந்தே அந்த இளைஞன் சபல புத்தியுடையவர். அவரது நண்பர்களிற்கு அது தெரியும்.  இராணுவத்தில் சேர்ந்தாலும் அவரது குணம் குறையவில்லை, மாறாக அதிகரித்தது.

பல யுவதிகளுடன் தொடர்பு வைத்திருந்த அவர், இறுதியில் அனுராதபுரம் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு மனைவியின் வீட்டில் வசிக்கத் தொடங்கினார். தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள்.

திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், அந்த நபருக்குள்ளிருந்த மன்மதன் தூங்கவில்லை. முடிந்தவடி யுவதிகளை கவிழ்த்து, காதல் உறவையும், பாலுறவையும் வைத்துக் கொண்டிருந்தார்.

அண்மைக்காலமாக அவர் கஹட்டகஸ்திகிலிய சிப்பிக்குளம் இராணுவ முகாமில் ஒரு சாதாரண சிப்பாயாக கடமையாற்றினார். அந்த முகாமில் இருந்த மற்ற வீரர்களுக்கும், இந்த மன்மதனைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தனர்.

பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் 17 வயதான அழகிய யுவதியொருவரை பார்த்ததும், சிப்பாய்க்குள்ளிருந்த மன்மதன் விழித்துக் கொண்டு விட்டான். அந்த யுவதியை அடைந்தே தீர வேண்டுமென நினைத்த இளைஞன், கற்ற வித்தையையெல்லாம் மொத்தமாக இறக்கினார்.

முடிவு- யுவதியுடன் அறிமுகத்தை ஏற்படுத்தி, கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்றுவிட்டார்.

17 வயது யுவதியின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்றவரால், யுவதியின் மனதை கரைக்க முடியாதா என்ன?

இவ்வளவு அழகான பெண்ணை வாழ்நாளிலேயே கண்டதில்லை, கொழும்பு புறநகர் ஒன்றின் ஓஐசி நான்- இவை அந்த இளைஞன் அடித்து விட்ட பொய்களில் சில.

சில நாட்களிலேயே 17 வயது யுவதிக்கு, தன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றியது… ராத்திரி நீளமாகியது. வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையில் உருவமில்லா உருண்டை உருண்டது.

ஒருநாள் நயன்தாராவிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, ஓ.ஐ.சி வரை பதவி உயர்வு கிடைத்தும் திருமணம் செய்யாமலிருப்பதால் வீட்டில் பெற்றோர் கண்டிப்பதாகவும், அவர்களே பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினான்.

நயன்தாராவிற்கு மனதிற்குள் திக் என்றது.

நம்முடன் உருகி உருகி கதைக்கும் ஓஐசிக்கு வேறு பெண்ணை பார்த்து பெற்றோர் மணம்முடித்து வைத்து விடுவார்களோ என பயந்தார். என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை.

அதன்பின் போலி ஓஐசியும், நயன்தாராவும் இரவு முழுவதும் கையடக்க தொலைபேசியில் காதல் குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டிருந்தனர். அறியாத வயதில், ஓஐசி இல்லாத உலகமொன்றை கற்பனை செய்ய முடியாத கட்டத்திற்கு நயன்தாரா சென்றார்.

இருவரும் காதலர்களானார்கள்.

நயன்தாரா சில மாதங்களுக்குப் பிறகு, தனது காதலனைப் பற்றி குடும்பத்தினரிடம் கூறினார்.

நமது 17 வயது மகளிற்கு பொலிஸ் ஓஐசி காதலனா?, லொஜிக் இடிக்கிறதே என நயன்தாராவின் பெற்றோர் சந்தேகப்பட்டனர். யாரோ ஒரு டுபாக்கூர் தமது மகளை ஏமாற்றுகிறார்களோ என சந்தேகப்பட்ட பெற்றோர், தமது சந்தேகத்தை மகளிடம் தெரிவித்தனர்.

எனினும், நயன்தாரா கோபப்பட்டார். தனது தூய்மையான காதலனை சந்தேகப்படுகிறீர்களா என பெற்றோரிடம் சண்டையிட்டார்.

எனினும், பெற்றோர் மசியவில்லை. காதலனை வீட்டுக்கு கூட்டி வரும்படியும், அவரைப்பற்றி தாம் தெரிந்து கொண்ட பின்னர் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்கலாமென சொல்லி விட்டார்கள்.

அன்று நயன்தாரா தனது காதலர், தனது பெற்றோர் கூறியதை கூறியுள்ளார். அதன்படி, அடுத்த விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் பேசுவதாக காதலர் உறுதியளித்தார்.

நயன்தாரா வீட்டுக்கு இப்படியே போக முடியாது. OIC போல் செல்ல வேண்டும். என்ன செய்யலாமென காதலன் மண்டையை உடைத்து யோசித்தார்.

அப்போதுதான் தனது நண்பன் ஜெகத்தின் நினைவு வந்தது. ஜெகத் இப்படியான தில்லாலங்கடி வேலைகளிற்கென்றே பிறந்தவன். ஏதாவது, ஏற்பாடு செய்வான் என நினைத்து, அவனை தொடர்பு கொண்டார்..

ஜெகத்துடன் ஆலோசித்ததில், போலீஸ் சீருடை மற்றும் அடையாள அட்டை தயாரித்து ஒரு ஓஐசியை போலவே மாறுவதென தீர்மானித்தார்.

அதன்படி, கொழும்பு புறநகர் பகுதியில் இத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்யும் ஒருவரை, காதலரிற்கு ஜெகத் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவரை தொடர்புகொண்டு தனது தேவையை சொன்னார். குறிப்பிட்ட திகதியொன்றில் கொழும்பு வருமாறு கொழும்பு நபர் சொன்னார். அதன்படி, குறிப்பிட்ட நாளில் கொழும்பு சென்று அந்த நபரை சந்தித்தார்.

அந்த நபர், போலி ஓஐசியை கொழும்பில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் சீருடையை தைத்து கொடுத்துள்ளார். மேலும், அவர் தனது படத்தைப் பயன்படுத்தி, ஓஐசி என்ற போலி போலீஸ் ஐடியை தயாரித்துள்ளார்.

எல்லாம் முடிந்ததும் காதலியின் வீட்டிற்கு செல்ல திகதி குறித்தார்.

குறிப்பிட்ட நாளில் பொலன்னறுவையில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு பரிசுகளுடன் சென்றார். நயன்தாரா குடும்பத்தினரும், உறவினர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அன்றைய தினம் தனது காதலியின் பெற்றோரிடம் தான் கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தின் OIC என்று கூறி போலி பொலிஸ் அடையாள அட்டையையும் சீருடையில் இருக்கும் சில படங்களையும் காட்டியுள்ளார்.

அவர் உண்மையான பொலிஸ்காரர்தான் என்பதை, நயன்தாராவின் பெற்றோரும் நம்பினார்கள். அன்று முதல் எந்த நேரமும் நயன்தாரா வீட்டிற்கு செல்ல அவருக்கு அனுமதி கிடைத்தது.

அதே நேரத்தில் நயன்தாராவின் காதலன் பொலிஸ் ஓஐசி என்ற தகவல் கிராமத்திற்குள் பரவியது. பொலிஸ் தொடர்புபட்ட விவகாரங்களில் நயன்தாராவின் உதவியை கேட்டு கிராமமக்கள் வீட்டிற்கு வந்தனர். நயன்தாராவும் பெருமையுடன் காதலனை தொடர்பு கொண்டார்.

அதற்கிணங்க பொலன்னறுவை மற்றும் சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களில் அவர்  தொடர்பு கொண்டு பேசி, பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். அதோடு நிற்காமல், நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கும் போன் செய்து கிராம மக்களின் பிரச்னைகள் குறித்து புகார் அளித்தார். இப்படியாக, சுமார் இரண்டு வருடங்கள் அவர் போலி OIC பாத்திரத்தை அற்புதமாக நடித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் நயன்தாராவுடன் அவர் பல இடங்களிற்கு சென்றார். கணவன் – மனைவியாக வாழ்ந்தனர். பொலிஸ் ஓஐசி மாப்பிள்ளை என பெற்றோரும் அதற்கு அனுமதித்தனர்.

அண்மையில் திடீரென ஓஐசியின் தொடர்பு இல்லாமல் போனது. நயன்தாரா எவ்வளவோ முயன்றும் காதலனின் தொடர்பு கிட்டவில்லை. அதன்பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்பது நயன்தாராவிற்கு தெரிந்தது.

அவளால் மட்டுமல்ல அவளது பெற்றோராலும் நடந்ததை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதன் பின்னர்தான், இந்த நபர் குறித்த தகவல்களை தேட ஆரம்பித்தனர். அதன் போது பொலன்னறுவை பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இந்த போலி OIC தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தினர்.  நயன்தாராவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகநபர் பொலிஸ் சீருடையில் இருக்கும் புகைப்படங்களையும் பிறப்புச் சான்றிதழையும் நயன்தாரா கொடுத்துள்ளார். இறுதியில் போலிப் பொலிஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

அதன்படி முதலில் அவர் கடமையாற்றும் கஹடகஸ்திகிலிய சிப்புக்குளம் இராணுவ முகாமிற்கு பொலிஸார் சென்றுள்ளனர். சந்தேக நபர் விடுமுறை எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றிருப்பது தெரிய வந்தது.

அன்று அனுராதபுரம் பகுதியில் உள்ள சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாயின் மனைவியின் வீட்டிற்கு பொலிசார் சென்றுள்ளனர். அவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வீட்டில் இருந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபரிடம் இருந்து பொலிஸ் சீருடை, போலி பொலிஸ் அடையாள அட்டை மற்றும் இரண்டு போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் என்பனவும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

34 வயதுடைய இராணுவ வீரர், போலீஸ் சீருடையை பயன்படுத்தியது மற்றும் போலி நாணய நோட்டுகளைப் பயன்படுத்தியது போன்ற குற்றங்கள் குறித்து பொலிசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply