தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக குத்தாட்ட நடனம் ஆடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. யூ-டியூப்பில் அதிகமானோர் பார்த்துள்ளனர். படம் வெற்றி பெறுவதற்கு இந்த பாடலும் காரணம் என்கின்றனர். இந்த நிலையில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியதை வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
‘‘விவாகரத்து செய்து வாழ்க்கையை கெடுத்து கொண்ட குத்தாட்ட நடிகை சமந்தா, ஜென்டில்மேனிடம் இருந்து ரூ.50 கோடியை வரியில்லாமல் திருடிக்கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார். நாக சைதன்யாவை ஜென்டில்மேன் என்று குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்ய சமந்தா ரூ.50 கோடி பெற்றதாக அந்த ரசிகர் விமர்சித்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
அந்த விமர்சனத்தை பார்த்த சமந்தா ‘‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்” என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவதூறு செய்தவர் மீது கோபப்படாமல் கனிவான முறையில் சமந்தா பதில் சொன்னது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவின் பதிலுக்கு அந்த ரசிகர் தன்னுடைய பதிவை நீக்கி விட்டார்.
Follow on social media