கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கைதாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுகயீனமுற்றுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்த உத்தரவிட்டவர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்ன என கடந்த 22 ஆம் திகதி கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன முன்னிலையில், அவரால் வழங்கப்பட்ட சாட்சியம் ஊடாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.
தொடர்ச்சியாக தனக்கு வாந்தி வருவதாக தெரிவித்து அவர் இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதியாகியுள்ளதாக அந்த தகவல்கள் கூறின.
இதனைவிட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்திய, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய உதவி பொலிஸ் அத்தியட்சர் தர்மரத்ன உள்ளிட்ட 6 பொலிஸார் குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் பல்வேறு சுகயீன நிலைமைகலைக் கூறி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் சி.ஐ.டி. எனும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் பொலிஸ் அத்தியட்சர் மொஹான் லால் சிறிவர்தனவின் வழி நடாத்தலின் கீழ், பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் எதிர்வரும் மே 2 ஆம் திகதி ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்த பீ 2424/ 2022 எனும் இலக்கத்தை உடைய வழக்கு நீதிவான் வாசனா நவரட்ன முன்னிலையில் விசாரணைக்கு வரும் நிலையில், அப்போது இந்த 7 பேரையும் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Follow on social media