நாளை (01) பிறக்கவுள்ள புத்தாண்டானது அனைத்து இலங்கையர்களுக்கும் அதிக வரிச்சுமையுடன் கூடிய புதிய ஆண்டாக அமையவுள்ளது.
வெட் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல், அதாவது நாளை (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வெட் வரி அமுலாகியுள்ளது.
எல்பி கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை புதிய VATக்கு உட்பட்டதுடன் அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் எம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் வெட் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களும் வெட் வரிக்கு உட்பட்டவை.
சோலார் பேனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் வெட் வரி விதிக்கப்படுகிறது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவையும் வெட் வரியை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல் மீது வெட் வரி விதிக்கப்படுகிறது.
கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலை விற்பனையின் போதும் வெட் வரி அறவிடப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகளுக்கு, பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகளுக்கு வெட் வரி வசூலிக்கப்படுகிறது.
திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் தயாரிப்பின் போது ஆய்வக வசதிகள் மீதும் வெட் வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தானியங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி அதிபோசனை உணவுகள் மற்றும் தேசிய தேங்காய் எண்ணெய்க்கும் வெட் வரி விதிக்கப்படவுள்ளது.
வெட் வரிக்கு உட்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளையும் அரசாங்கம் அறிவித்தது.
சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுகள் வெட் வரி இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், VAT அதிகரிப்பால் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பல தொலைபேசி வலையமைப்பு சேவைகள் தமது கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.
இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சியும் (Distilleries Company of Sri Lanka PLC) தனது மதுபானங்களின் விலைகளை நாளை முதல் திருத்தியமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
375 மில்லி பாட்டில் 50 ரூபாவினாலும் 180 மில்லி மதுபான போத்தல் 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாதாந்த விலைத் திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) இரவு எரிபொருள் விலையும் திருத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Follow on social media