ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக சேதத்தை சந்தித்த ஹெராத் நகரில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வீடுகள் உட்பட பல கட்டிடங்கள் இடிந்துள்ளதுடன், இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், நாட்டில் அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதாகவும், நெடுஞ்சாலைகளும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலை காரணமாக மீட்பு பணிகளும் தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹெராட்டில் இருந்து வடமேற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் மேலும் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Follow on social media