காசாவின் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்த மக்கள் பலர் அங்கு தங்கியிருந்த நிலையில் தேவாலய வளாகத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கிரேக்க ஓர்த்தடக்ஸ் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
12ம் நூற்றாண்டை சேர்ந்த தேவாலயத்திற்கு அருகில் காசாவின் பல முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தஞ்சமடைந்திருந்த பகுதியை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதலை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட தளத்தை தங்கள் விமானங்கள் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலால் தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது சேதங்கள் குறித்து அறிந்துள்ளோம் நாங்கள் இது குறித்து ஆராய்ந்துவருகின்றோம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தேவாலயத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது இதனால் அதற்கு அருகில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
Follow on social media