களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் போதே வைத்தியசாலைக்கு வந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
களுத்துறை வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (25 ) பிற்பகல் களுத்துறை வெனிவெல்பிட்டிய வெந்தேசி தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு சிலர் வந்து அங்கிருந்த இளைஞர் ஒருவரை தாக்கி வீட்டின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் சுத்தா மற்றும் ரணே என்ற இருவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் இருந்த இளைஞனை தாக்கிய குழுவினர் பின்னர் அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த வீட்டின் இரண்டு இளைஞர்கள் அருகில் உள்ள காட்டுக்குள் குதித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் குறித்த தாக்குதல் கும்பலுடன் கதைத்து விட்டு அங்கிருந்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதேவேளை, குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனின் நலம் விசாரிப்பதற்காக நாகொட வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாயாரும் தாக்கப்பட்டுள்ளார்.
நாகொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய பெண் நாகொட வைத்தியசாலைக்குள் நுழைவதற்கு முன்னர், அங்கு வந்த காடையர்கள் குழு பொலிஸாரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குறித்த பெண்ணை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த பெண்ணும், வீட்டில் வைத்து தாக்கப்பட்ட அவரது மகனும் தற்போது நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ‘ரணே’ இன்று (26) பிற்பகல் அதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.