துவரங்குறிச்சி அருகே வீடியோ வெளியிடுவதாக மிரட்டி கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நேற்று பிரேத பரிசோதனை முடித்து உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், பாக்கியலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த கடிதத்தில், எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் தன்னுடைய இறப்பிற்கு காரணம். எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மாணவி செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, மாணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போது, அவர் அந்த வாலிபரை ஒதுக்கியதும், அதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், மாணவியும், தானும் நெறுக்கமாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதும், தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டிய அந்த வாலிபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Follow on social media