சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – 3 பேரை கைது செய்யுமாறு கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர்.

துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படாத நிலையில்,

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய

விடுதி வைத்தியர், பெண் தாதி உத்தியோகத்தர், ஆண் தாதி உத்தியோகத்தர் ஆகிய மூவரை உடனடியாக கைது செய்து வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல மன்று அனுமதிக்க வேண்டும் என சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் அடுத்த வழக்கில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்த நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா வழக்கை நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு தவணையிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில் நீதிமன்றம் சிறுமி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூன்று வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்தது .

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர் நிபுணர் குழு அறிக்கை மன்றுக்கு சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையிலே சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply