திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி திடீர் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி (வயது 20) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் (26) இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின்னர் தனது உடல்நிலை சரியில்லை எனவும் உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அந்த யுவதி நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் சில உடல் அவையங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply