யாழ் மீசாலையில் மைதானத்திற்குள் புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மீசாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே வாள்வெட்டுத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட 12 பேரைக் கொண்ட கும்பலில் நான்கு பேரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து, நையப்புடைத்து, மின்கம்பங்களில் கட்டிவைத்த நிலையில்,

கொடிகாமம் பொலிஸார் சந்தேக நபர்களை ஊரவர்களிடமிருந்து மீட்டு, அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகமொன்றினால் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நடத்தப்பட்டு வந்த நிலையில்,

அதன் இறுதிப் போட்டி சனிக்கிழமை (16) நடைபெறவிருந்தது. மைதானத்தில் கழக உறுப்பினர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது 12 பேர் கொண்ட வன்முறை கும்பல் மைதானத்துக்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து,

போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது. அவ்வேளை, இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஊரவர்கள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தியவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது,

கும்பலைச் சேர்ந்த அனைவரும் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்தும் பிரதேசவாசிகள் அவர்களை துரத்திச் சென்று, நான்கு பேரை பிடித்து, அடித்து, பின்னர் மின்கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

இதனையறிந்த கொடிகாமம் பொலிஸார், சம்பவ இடத்துக்கு சென்று மின்கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த நால்வரையும் மீட்டு, அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

தாக்கிவிட்டு தப்பிச் சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting