உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 வெளியிட்ட காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி நேற்று (05) வௌியிட்ட நிகழ்ச்சியில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள், இதுவரை சரியாக ஆராயப்படாத உண்மைகள் தொடர்பாக பக்கசார்பற்ற, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பரந்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, Channel 4 தொலைக்காட்சி, ராஜபக்ஸ குடும்பத்துடன் தொடர்ந்தும் குரோதத்துடனேயே செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் CID, FCID உள்ளிட்ட பல்வேறு விசாரணை நிறுவனங்களுக்கு சென்று, வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட தாம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறான செயற்பாட்டை எவ்வாறு திட்டமிட்டிருக்கு முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌிக்கொணர்வுகள் இருப்பதாக இதற்கு முன்னர் தகவல் வௌியான நிலையில், அது தொடர்பான Dispatches நிகழ்ச்சி நேற்றிரவு ஔிப்பரப்பானது.

இந்த அறிக்கையில் நிகழ்ச்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் Sunday Leader ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான தகவல்களும் உள்ளடங்கியிருந்தன.

பிள்ளையான என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் ஊடகப்பேச்சாளர் மற்றும் நிதிச் செயலாளராக செயற்பட்ட ஹன்சீர் அசாத் மௌலானா மற்றும் தற்போது நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் பெயர் குறிப்பிடாத அரச அதிகாரி ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் பல விடயங்களை வௌிக்கொணர்ந்துள்ளனர்.

Tripoli Platoon எனும் பெயரில் குழுவொன்றை உருவாக்குவதற்காகவே தாமும் பிள்ளையானும் அவ்வேளையில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தாக ஹன்சீர் அசாத் மௌலானா இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Tripoli Platoon குழுவானது கோட்டாபயவின் நேரடி கட்டளையின் கீழ் செயற்பட்டதாகவும் அரசாங்கத்திற்கு எதிரானவர்களைத் தெரிவு செய்து அவர்களை அக்குழுவினர் கொலை செய்ததாகவும் ஹன்சீர் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ஸவே பணித்ததாகவும் ஹன்சீர் அசாத் மௌலானா குறித்த நிகழ்ச்சியில் வௌிக்கொணர்ந்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வாவும் Tripoli Platoon மற்றும் லசந்த விக்மரதுங்கவின் கொலை தொடர்பில் Channel 4 நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்டுள்ளார்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு Tripoli குழுவின் அங்கத்தவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட 05 தொலைபேசிகள் மற்றும் அவர்கள் அதனை செயற்படுத்திய விதம் தொடர்பிலான தகவல்கள் தொடர்பில் தன்னால் வௌிப்படுத்த முடியும் என முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா அதில் கூறியுள்ளார்.

இதேவேளை, பிள்ளையான், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேகநபர்களை சந்தித்த விதம் தொடர்பிலும் ஹன்சீர் அசாத் மௌலானா தௌிவுபடுத்தியுள்ளார்.

”சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு பிள்ளையான் என்னிடம் கூறினார். சுரேஷ் சலே மற்றும் அந்த நபர்களுடன் அந்த சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். பின்னர் வரவேண்டிய இடம் தொடர்பில் நான் அந்த குழுவுக்கு தகவல் வழங்கினேன். எனக்கு அனைத்து விடயங்களும் தெரியாது. நான் அந்த இடத்திற்கு சென்ற போது அது மிகப்பெரிய தென்னந்தோப்பாக இருந்தது. அங்கு ஒரு வீடு இருந்தது. அவர்கள் வௌ்ளை நிற வேனொன்றில் வந்தனர். 6 பேர் வந்தனர். சைனி மௌலவி அங்கு வந்து எனக்கு கைலாகு கொடுத்து என்னை அரவணைத்து சலாம் செய்தார். அதற்கு பின்னர் அவரது சகோதரரான சஹரானை அடையாளப்படுத்தி விட்டு இவரே எமது அமீர் என்று கூறினார். அமீர் என்றால் தலைவர் என்று பொருள்படும். நான் அவர்களுக்கு சுரேஷ் சலேவை அறிமுகப்படுத்தினேன். அந்த சந்திப்பு நீண்ட நேரம் இடம்பெற்றது. ராஜபக்ஸவினருக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற நிலைமையொன்றை உருவாக்க வேண்டிய தேவையிருப்பதாக அதன் பின்னர் சுரேஷ் சலே என்னிடம் கூறினார். அதுவே கோட்டாபய ஜனாதிபதியாகவிருக்கும் ஒரேயொரு மார்க்கம் எனவும் அவர் கூறினார்”

என ஹன்சீர் அசாத் மௌலானா கூறியுள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பிலும் அசாத் மௌலானா தெளிவுபடுத்தியுள்ளார்.

”சுரேஷ் சலே என்னை தொடர்புகொண்டார். விரைவாக தாஜ் சமுத்ராவுக்கு செல்லுமாறும் நாங்கள் வரும் வரை ஒருவர் காத்திருப்பதாகவும் அவரை எங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொள்ளுமாறும் கூறினார். அவரை வாகனத்தில் ஏற்றியவுடன் அவரின் தொலைபேசியை பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார். உங்களால் எங்கு செல்ல முடியும் என்று அவரிடம் கேட்டு, அவரை அந்த இடத்தில் இறக்கிவிடுமாறும் கூறினார். அதன்போது sir, நான் மட்டக்களப்பில் இருப்பதாக கூறினேன். குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் அவர்களின் முகங்களை அடையாளங்கண்டேன். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் முதலாவது நபர் சஹரான். நான் அவர்களை அறிந்திருந்தேன். நான் அச்சமடைந்தேன். அவ்வேளையில் நான் பிள்ளையானை தொடர்புகொண்டேன். வாயை மூடிக்கொண்டிருக்குமாறும் உங்களுக்கு எதுவும் தெரியாது அவ்வளவு தான் என்றும் பிள்ளையான் என்னிடம் கூறினார்”

பெயர் குறிப்பிடாத மற்றுமொரு அரச அதிகாரியும், Channel 4 நிகழ்ச்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது வௌியானதாக கூறப்படும் தகவல தொடர்பில் வௌிப்படுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிள்ளையானிடம் வினவுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என Channel 4 தொலைக்காட்சி தெரிவிக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை எனவும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்ததாகக் கூறும் சந்தர்ப்பத்தில் தாம் மலேஷியாவில் இருந்ததாகவும் தற்போதைய அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே Channel 4 தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் தாம் இந்தியாவில் இருந்தாகவும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் 2019 தாக்குதலின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு கட்டமைப்பில் தாம் செயற்படவில்லை எனவும் சுரேஷ் சலே மேலும் கூறியுள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply