மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் குற்றங்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு, வீதி சோதனை, திடீர் சுற்றிவளைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுமென அதன் கட்டளை அதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த 11 நாட்களுக்குள் தென் மாகாணத்தில் எந்தவொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறே, அண்மையில் அதிகளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவான அம்பலாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகரான ஸ்டேட்புர தனுஷ்கவின் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியாக இருந்த குடு நிலன்தி என்ற பெண் ஐஸ் ரக போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேண்ட்பாஸ் பகுதியில் விசேட காவல்துறை அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 20 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் 23 ஆயிரம் ரூபா பெறுமதியான பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
44 வயதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிரேண்பாஸ் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Follow on social media