மாணவி மீது சரமாரி கத்திக்குத்து – 21 வயது இளைஞர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காதல் விவகாரத்தில், கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் குப்பத்தாமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 21 வயதாகும் இளைஞர், தனியார் கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி ராணிப்பேட்டையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

தினமும் காலை நேரத்தில், வீட்டிலிருந்து புறப்பட்டு திருவலம் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்துவிட்டு அவரவர் கல்லூரிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, சதீஷ்குமாருடன் மாணவி பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், வேறு யாரையோ மாணவி விரும்புகிறார் என்று சந்தேகப்பட்டு, அவரை தீர்த்துக் கட்டவும் திட்டம் வகுத்திருக்கிறார் சதீஷ்குமார்.

இந்த நிலையில், இன்று காலை கல்லூரிக்குச் செல்வதற்காக திருவலம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவியை கண்டதும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமார் சரமாரியாக குத்தத் தொடங்கினார். இதில், ரத்தம் தெறித்து மாணவி சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவம் குறித்து அறிந்த திருவலம் போலீஸார், மாணவன் சதீஷ்குமாரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting