வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் சனிக்கிழமை பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்ற தருணம் குறித்த நபருக்கு பிடியாணை உள்ளதாக கூறி விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணையின் பெயரில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
49 வயது குடும்பஸ்தரான சந்திரகுமார் சந்திரபாலன் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இரவு உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்கள் பெற வேண்டியிருந்ததால் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் இது பொலிஸாரின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனாலேயே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Follow on social media