விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 வயது மாணவி – பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சின்னசேலம் அருகே உள்ள தனியார் பாடசாலையின் விடுதியில் தங்கி கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்னும் மாணவி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த 13 ஆம் திகதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி – சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.

தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பொலிஸார் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் பொலிஸார் பலர் காயம் அடைந்தனர். பொலிஸாரின் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.

தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.

இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் நடந்த கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,

“பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி எழுதிய கடிதம் உள்பட அனைத்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றபட்டுள்ளது.

ஆசிரியர்கள் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். சிபிசிஐடி விசாரணைக்கு தேவை இருக்காது. பள்ளி மீது எந்த தவறும் இல்லை. போராட்டத்தை ஒடுக்க 500 ஆயுதப்படை பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளனர்.

கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும். உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும். காணொளி காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதனால் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டும். போராட்டக்காரர்களை காணொளி காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். அமைதியாக தொடங்கிய போராட்டம் திடீரென கலவரமாக மாறியுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பக்கூடாது. போராட்டம் நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply