தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பலக்னுமா காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 28ந்தேதி முகமது மிராஜ் உத்தின் என்பவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், தனது அத்தை ஹூர் உன்னிசா என்பவர் தனது சகோதரி உறவு முறையான 16 வயது சிறுமியை 57 வயதுடைய அப்துல் லத்தீப் பராம்பன் என்பவருக்கு மணம் முடித்து வைத்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.
அவரது புகாரின் பேரில், போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை உன்னிசா, அவரது கணவர் மிர் பர்ஹத்துல்லா, அவரது மகன் மிர் ரகமதுல்லா மற்றும் ஏஜெண்டுகளாக செயல்பட்ட முகமது அப்துல் ரகுமான், வாசீம் கான் மற்றும் முகமது பதியுதீன் கத்ரி ஆகிய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில், உன்னிசாவிடம் நடந்த விசாரணையில், பணத்திற்காக வயது முதிர்ந்த எந்த ஒரு நபரிடமும் சிறுமியை விற்று விட அவர் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக தனது கணவர், மகன் உள்ளிட்டோருடன் சேர்ந்து அவர் சதி திட்டம் தீட்டியுள்ளார்.
இதன்பின்னர் மலாக்பேட்டை பிரிவை சேர்ந்த காஜி, முகமது பதியுதீன் கத்ரி என்பவரிடம் போலி ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்து உள்ளனர். அவற்றை கொண்டு அப்துல் லத்தீப் உடன் சிறுமியை சட்டவிரோத வகையில் திருமணம் செய்து வைத்து உள்ளனர்.
இந்த திருமணத்திற்கு பின்னர், ஐதராபாத் நகரில் பண்டலகுடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து சிறுமியை லத்தீப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கில் தப்பியோடிய லத்தீப் உள்ளிட்ட பிற குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
Follow on social media