நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும்
இன்று முன்னெடுக்கப்பட்டது.
பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொதுமகள் அயல் கிராமத்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாத்திப்புக்களை சந்தித்து வருகின்றனர். எமது குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எமது மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் நின்றே நாட்கள் கழிகின்றது. இந்த நிலை எப்போது மாறப்போகின்றதோ என்ற அச்சம் இன்று அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டையும், மக்களையும் படுகுழியில் தள்ளிய இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.
இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டியது அனைவரதும் தலையாய கடமை. பிரதேசவாதம் பாராது சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற பேதம் மறந்து மக்களாய் போராடுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டுப்பாட்டு விலையை கொண்டுவா, கோட்டா மகிந்த அரசே ஆட்சியை விட்டு வெளியேறு, போராடும் மக்களை சுட்டுக்கொல்லாதே போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
போராட்டத்தின் போது பூந்தோட்டம் சந்தியில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன், கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தது.
…
Follow on social media