லெபனான் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 188 ஆக உயர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

லெபனான் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.

பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 740 டன் வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.

இந்த வெடிவிபத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

வெடிவிபத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பலர் உயிரிழந்தனர். மீட்பு பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெடிவிபத்து நடைபெற்று கிட்டத்தட்ட 1 மாதம் நிறைவடைய உள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்பு பணியின் போது மேலும் சில உடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பெய்ரூட் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும் இந்த விபத்தில் இன்னும் 7 பேர் மாயமாகி இருப்பதாகவும், அவர்களின் நிலை என்ன என்றே தெரியவில்லை எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான 7 பேரின் 3 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், 3 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள், எஞ்சிய 1 நபர் எகிப்தை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மாயமான 7 பேரின் நிலை என்ன? என்பதை கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகளை நிறுத்தப்போவதில்லை என லெபனான் ராணுவத்தின் செய்திதொடர்பாளர் இலியஸ் ஆட் தெரிவித்துள்ளார்.

ராணுவம் இந்த கருத்தை தெரிவித்திருக்கும் நிலையில் லெபனான் உள்நாட்டு படைகள் மாயமான அனைவரின் உடல்களையும் (33 பேர்) மீட்டுவிட்டதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

ராணுவம் மற்றும் உள்நாட்டு படைகளுக்கு இடையேயான இந்த தகவல் முரண்பாடுகளால் பெய்ரூட் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான உண்மையான விவரம் எது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply