றம்புக்கனை துப்பாக்கிச் சூடு – SSP உள்ளிட்ட 4 பொலிஸார் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அண்மையில் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (28) பிற்பகல் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதேபோல், குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் கண்டி குண்டசாலை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, றம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் கடந்த 27ஆம் திகதி உத்தரவிட்டது.

இது தொடர்பான உத்தரவு நேற்று (28) பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன், பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷன் கடந்த 19ஆம் திகதி றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply