ரம்புக்கனை யில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது உயிரிழந்த 42 வயதான சமிந்த லக்ஷானின் சடலம் மீதான இறுதிக் கிரியைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரின் சடலம் நேற்று முன்தினம் மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, ரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு, கேகாலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவினால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை நேற்றைய தினம் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைக்காக காவல்துறைமா அதிபர் நியமித்த குழு, கேகாலை நீதவானிடம் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
குறித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுபடுத்துவதற்காக காவல்துறை கலகம் அடக்கும் பிரிவினரால் 4 ரி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, 35 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 51 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய்பட்டுள்ளதாக காவல்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
Follow on social media