மஹிந்தவுக்கும் ஆதரவாக 50 எம்பிக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான ஆவணத்தில் 50 பாராளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணத்தை ஜனாதிபதியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் ஆவணத்தில் கையொப்பமிடும் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. காலை முதல் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கையொப்ப சேகரிப்பில் நேற்றிரவு வரை 50 பாராளுமன்ற உறுப்பினர்களே ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்று அறிய வருகின்றது.

இதனிடையே, மஹிந்த ராஜபக்ஷவை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சந்திப்பதற்கு முயன்றிருந்தனர். இந்நிலையில், அவர் கொழும்பை விட்டு விலகி தங்காலைக்கு சென்றுவிட்டார்.

இதனால், இன்று திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பாரா என்றும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க, புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தன்னிச்சையாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் 113 பேரின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணத்தை ஜனாதிபதியிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேசமயம், இரு நாட்களுக்குள் நாட்டில் பெரும் அரசியல் திருப்பம் ஒன்று ஏற்படும் என்று தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகின்றது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply