ஆரிய குளம் என்பது ஆரியர்களுடையதா? அல்லது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் உருவாக்கப்பட்டதால் இப்பெயரைப் பெற்றதா என்றெல்லாம் கேள்விகள் எழும்பி இறுதியில் ஆரியச் சக்கரவர்த்திகளுக்கும் ஆரிய குளத்திற்குமான தொடர்பு வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்டு இந்த மரபுரிமை அடையாளச் சின்னம் புனரமைக்கப்பட்டிருக்கிறது. பாதுகாக்கப் பட்டிருக்கிறது. மக்களுடைய இயற்கை சார்ந்த பொழுது போக்கு தலமாகவும் மாறியிருக்கிறது. இன்னும் ஒரு வகையில் வரலாறு பேசப்படுகிறது.
இது இப்படியிருக்க குளம் சுத்தகரிக்கப்பட்டு குளத்தில் படர்ந்திருந்த Alga நீர்த்தாவரங்கள் அகற்றப்பட்டு நீர் விளையாட்டுக்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் இரண்டு தாராப் படகுகளும் விடப்பட்டிருந்தன. குளம் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஓரிரு கிழமைகளில் பொறுப்பற்ற இளைஞர்கள் சிலர் அங்கிருந்த தாராப் படகில் ஒன்றை சுவருடன் மோதியோ என்னவோ சேதமாக்கியிருந்தனர். சேதமடைந்த படகின் துவாரத்தின் வழி நீர் உள்ளேறி அந்த தாரா அரைவாசிக்கு மேல் நீரினுள் அமிழ்ந்த நிலையில் சில பல நாட்கள் பரிதாபமாக நின்றது. பின்னர் அதை அகற்றி முகாமை செய்திருந்தது நிர்வாகம். இவை யாவும் நிகழ்ந்து ஒரு சில மாதங்கள் கழிந்த நிலையில் மற்றைய தாராவும் உடல் தாழ்ந்து நீரிற்குள் அமிழ்ந்திருந்ததையும் கண்டேன். பின்னர் ஒரு நாளில் அதனையும் அப்புறப்படுத்தியிருந்தார்கள்.
ஆரிய குளத்தின் அமைவிடம் காலையிலும் மாலையிலும் அலுவலகம் செல்லும் வழி என்பதால் இந்தக் குளமும் காட்சிகளும் ஒவ்வொரு நாளும் கண்களை நிறைப்பது மட்டுமன்றி அங்கு மெல்ல மெல்ல நிகழ்ந்து வருகிற மாற்றங்களையும் அவதானிக்க முடிந்தது. புனரமைப்பின் பின்னான குளத்தின் மக்கள் பாவனை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்து அங்கு சில தாராக்களும் கொண்டு வந்து விடப்பட்டிருந்தன. அவற்றிற்கான உணவு அங்கு கடமையில் இருக்கிற காவலாளிமூலம் கிடைப்பதை அறிந்து கொண்டேன். காத்து வாக்கில இரண்டு காதல் போல காத்து வாக்கில இரண்டு உரையாடல்களை நிகழ்த்தியதன் பலன் அது.
சரி, இது இப்படியிருக்க அங்கிருக்கிற தாராக்கள் நீரில் நீந்திக் கழிக்கிற காலத்தை விட படிக்கட்டுக்களில் குந்தியிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்ததையும் அவதானித்தேன். முடிந்த அளவு நீரை புறக்கணித்த அவற்றின் நடத்தை குளத்து நீரின்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்னுடைய அனுமானம் சரி !!
குளத்தின் நீர் படிப்படியாக நிறம்மாறி பச்சை கலந்த நிறத்திற்கு மாற்றமடைந்துகொண்டு வருகிறது. இன்றைக்கு அவ்வழியால் செல்லுகிறபோது அணிந்திருந்த முக கவசத்தை கீழிறக்கி முகர்ந்து பார்த்தேன், நீரில் ஒருவித நாற்றமும் பரவத் தொடங்கியிருக்கிறது. தவிர குளத்தின் நீர் உள்வருகிற பிரதான வாய்க்காலை அண்டியதாக நீரின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான சிறிய சிறிய மீன்கள் இறந்து கிடந்தன. இவை நிகழ்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்தான் குளப்பகுதிகளில் குளோரின் ஸ்பிறே தெளிக்கிறேன் என்று ஒருவர் வீதியில் செல்லுகிற வாகனங்களை கவனிக்காமல் தெளித்து என் கண்களும் பரிதாபமாக கண்ணீர் விட்டன. ஆக இதனால் மீன்கள் இறந்திருக்குமோ என்றால் ஒப்பீட்டளவில் வாய்ப்புக்கள் குறைவு ஆக இந்த இறப்புக்களிற்கும் நீரின் நிற மாற்றத்திற்கும் மணத்துற்கும் காரணம் யூரிபிகேசன் (Eutrophication).
குளத்தில் வாழுகிற மீன்கள் உட்பட்ட உயிரிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கிறபோது அவற்றின் சுவாசத்திற்கு தேவையான நீரில் கரைந்துள்ள ஓக்சிசனின் அளவும் அதிகரிக்க வேண்டும். குறித்த இடத்தின் வானிலையில் நிகழுகிற மாற்றங்களின் ஊடாக பிராண வாயுவின் அளவு அதிகரிக்கப்படும். ஆனால் கிடைக்கிற ஒக்சிசனின் அளவை விட ஒப்பீட்டளவில் மீன்கள் அதிகரிக்கிற போது அங்கு பிராணவாயுப் பற்றாக்குறை நிகழ்கிறது. இதனால் மீன்கள் இறக்கின்றன. இதே நேரத்திலே இறந்த மீன்களை அழுகல் அடையச் செய்கிற பக்ரீரியாக்களின் பெருக்கமும் இந்தச் சூழலை சாதகமாக்கி வளரக் கூடிய சிறு நீர்த்தாவரங்களின் வளர்ச்சியும் தூண்டப்படுகிறது. இதனால் துர் நாற்றமும் நீர் பச்சை கலந்த பழுப்பு நிறமாகவும் மாற்றமடைகிறது.
இவ்வாறான ஒரு அனுபவத்தை தலதா மாளிகையை அண்டியிருக்கிற கண்டி வாவி கண்டிருக்கிறது. உயிர்க்கொலை பாவம் என்று கருதி வாவியில் இருந்த மீன்கள் அகற்றப்படாமல் பல்கிப் பெருகின. அதே நேரம் மலைகளால் சூழப்பட்ட கண்டி வாவியை அண்மித்திருக்கிற வானிலையில் நிகழ்கிற மாற்றங்கள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தன. மலைகள் சூழ்ந்து காற்றுத் தடையாக இருந்தமையே இதற்கான காரணம் என்பதையும் கண்டறிந்தார்கள். இவற்றை நிவர்த்தி செய்வதற்காக நீர்ப் பூக்கள் என்று அழைக்கப்படுகிற High pressure pumps which sprinkling the Water இனை நாளின் பெரும்பாலான நேரத்தில் தொடர்ச்சியாக இயக்கி நிலமையை வென்றார்கள். இவ்வாறான நீர்த் தாரைகள் வானை நோக்கி மேலே விசிறப்படுகிறபோது அவை வளியில் உள்ள ஒக்சிசனை தம்மோடு கரைவடையச் செய்து நீர் நிலைக்குள் அழைத்து வருகின்றன. இதனால் நிலமையை சமாளிக்கும் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஆரிய குளத்தின் நடுவிலும் இரவில் இந்த நீர்ப்பூக்கள் இயக்கப்பட்டன, அலங்காரத்தின் ஒரு அங்கமாகவே அது அனேகரால் பார்க்கப்பட்டது. ஆனால் மின்சாரத்தடை அது இதுவென்று அதுவும் முறையற்றுப் போனதன் விளைவுகளில் ஒன்றே தற்போதுள்ள ஆரிய குளத்தின் நிலை. ஆனால் இதற்கும் ஒரு தீர்விருக்கிறது. நிறைந்த வெய்யில் வாங்கும் குளத்திற்கு அருகில் ஒரு Solar Panel system இனை அமைத்து அதன்மூலம் கிடைக்கிற மின்சாரத்தை பயன்படுத்தி நீர்த் தாரைகளை இயக்குவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
Follow on social media