நான்கு வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் இதுவரை நான்கு வகையான உருமாறிய கொரோனா வகைகள் உலகெங்கும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவியது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றைப் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இந்த உருமாறிய கொரோனா வகை வேகமாகப் பரவும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் உலகெங்கும் பல அசாதாரண சுகாதார பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது உலகில் நான்கு வகையான உருமாறிய கொரோனா வைரஸ் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் D614G என்ற மரபணு மாற்றத்தோடு முதல் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வகையைக் காட்டிலும், இந்த வகை கொரோனா வைரசே கடந்த ஜூன் மாதம் முதல் உலகெங்கும் அதிகளவில் பரவ தொடங்கியது. இந்த வகை கொரோனா முன்பு இருந்ததைவிட வேகமாகப் பரவும் என்றாலும்கூட இவை கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர் காலகட்டத்தில் மூன்றாவது வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. “கிளஸ்டர் 5” என்று அழைக்கப்படும் இந்த உருமாறிய கொரோனா வகை டென்மார்க் மற்றும் வடக்கு ஜட்லாண்ட் ஆகிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டன. இந்த வகை கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலில் ஏற்படுத்தும் மாற்றம் காரணமாக மனிதர்களில் உடலில் இயற்கையாக உருவாகும் நோயெதிர்ப்பு சக்தி குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். கடந்த செப்டம்பர் மாதம் வரை, உலகெங்கும் வெறும் 12 பேருக்கு மட்டுமே இந்த “கிளஸ்டர் 5” வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி, மற்றொரு உருமாறிய கொரோனா வகை பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த வகை கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியிருக்கும் என்ற ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. தற்போதுவரை இந்த புதிய உருமாறிய கொரோனா வகை 31 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேகாலகட்டத்தில், டிசம்பர் 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்க நாட்டில் மற்றொரு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இது பிரிட்டனில் கண்டறியப்பட்ட வகையாக இருக்கும் என்றே முதலில் ஆராய்ச்சியாளர்கள் கருதினர். இருப்பினும், தென் ஆப்பிரிக்காவில் பரவுவது மற்றொரு புதிய வகை கொரோனா என்பதை ஆராய்ச்சியாளர்கள் பின்னரே கண்டறிந்தனர். தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் இந்தப் புதிய கொரோனா வகை பரவுகிறது. தென் ஆப்பிரிக்க வகை கொரோனா இதுவரை நான்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ்கள் மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் என்றாலும் இவை வைரஸ் பாதிப்புகளை அதிகப்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உருமாறிய கொரோனாக்கதளில் வெறும் மிகச் சில மாற்றங்களே இருக்கும் என்பதால் தடுப்பூசிகள் அனைத்தும் இவற்றுக்கு எதிராகப் பலனளிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.