நடிகை பாலியல் பலாத்கார சம்பவத்தில் சாட்சியை கலைத்ததாக புகாரில் நடிகை காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த கேரள குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் திலீப் சாட்சியங்களை அழிக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
கடந்த 2 நாட்களாக நடிகர் திலீப்பிடம் சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் 2-வது மனைவியும், பிரபல நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் ஆலப்புழாவை சேர்ந்த ஒருவர் திடீரென பல்டி அடித்தார். இதில் காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடமும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow on social media