முன்னணி நடிகர் விஷால் நடித்து இயக்க இருக்கும் துப்பறிவாளன் 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஷால் ஏற்கனவே பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி செல்லமே படம் மூலம் கதாநாயகன் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் டைரக்டர் அவதாரம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 2-ம் பாகமும் இதே கூட்டணியில் உருவானது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டதால் படத்தை இயக்க முடியாது என்று மறுத்து மிஷ்கின் வெளியேறிவிட்டார். இதையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார்.
ஆனாலும் பட வேலைகளை தொடங்காமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்ததால் துப்பறிவாளன்-2 படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக பேச்சு கிளம்பியது. இந்த நிலையில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை ஜனவரி மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் விஷால் அறிவித்துள்ளார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
Follow on social media