டிரம்ப், அமெரிக்க மக்களுக்காக போராடுவதை நிறுத்தமாட்டார் என்றும் அமெரிக்கா தான் அவரது இதயம் என்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் இந்ந மாநாட்டில் பங்கேற்று டிரம்ப்புக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் நேற்று முன்தினம் குடியரசின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-
நான் இங்கே இருக்கிறேன். ஏனென்றால் என் கணவர் நமது ஜனாதிபதியாகவும், தளபதியாகவும் இன்னும் 4 ஆண்டுகள் இருக்க வேண்டும். அவர் தான் நம் நாட்டுக்கான சிறப்பான தலைவர்.
முன்பை விட இப்போது என் கணவரின் தலைமை நமக்கு தேவை என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல என்பதை கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள். அவர் வார்த்தைகளை மட்டும் பேசவில்லை. செயல்களில் ஈடுபடுகிறார். நாட்டின் எதிர்காலமே எப்போதும் அவருக்கு முக்கியமானது. அமெரிக்கா தான் அவரது இதயம். அமெரிக்க மக்களுக்காகப் போராடுவதை அவர் ஒருபோதும் நிறுத்த மாட்டார்.
இவ்வாறு மெலனியா டிரம்ப் பேசினார்.
Follow on social media