சரும அழகை காக்கும் ஆட்டுப்பால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆட்டு பாலில் தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்தலாம். அல்லது ஆட்டு பாலுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். ஆட்டு பால் தரும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

சரும பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் ஆட்டுப்பால் மூலம் தீர்வு காணலாம். ஆட்டு பாலில் தயாராகும் பொருட்கள் மற்றும் ஆட்டு பால், தோல் பிரச்சினைகளை குறைத்து, சரும ஆரோக்கியத்தை பேண உதவும் என்கிறார், பெங்களூருவை சேர்ந்த தோல் மருத்துவர் கே.ஸ்வரூப்.

ஏனென்றால், பசு அல்லது எருமைப்பாலுடன் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவையும் நிரம்பியுள்ளன. இவை தோல் பிரச்சினைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. ஆட்டு பாலில் தயாரிக்கப்படும் சோப்பை பயன்படுத்தலாம். அல்லது ஆட்டு பாலுடன் சில பொருட்களை கலந்தும் உபயோகிக்கலாம். ஆட்டு பால் தரும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

சருமத்தை சுத்தப்படுத்தும்:

ஆட்டுப்பால் சருமத்திற்கு மென்மை தன்மை கொடுக்கக்கூடியது. அதனை இயற்கையான சுத்தப்படுத்தியாகவும் பயன்படுத்தலாம். சந்தையில் கிடைக்கும் சோப் வகைகள் பெரும்பாலும் எல்லோருடைய சருமத்திற்கும் பொருத்தமாக இருக்காது. அவரவர் சருமத்தின் தன்மையை பொறுத்து அதற்கேற்ற சோப் வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை நீக்கிவிடக்கூடும். இதனால் சருமம் அடிக்கடி உலர்வடைய நேரிடும். கிரீம் வகைகளும் இத் தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் ஆட்டுப்பால் அப்படிப்பட்டதல்ல. தினமும் ஆட்டுப்பாலை முகத்திலும், சருமத்தின் பிற பாகங்களிலும் தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை மீட்டெடுக்கலாம். ஆட்டு பாலை தினமும் இரண்டு, மூன்று முறை கூட முகத்தில் தடவி வரலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தேவையற்ற ரசாயனங்களின் படிமங்களை அகற்ற உதவும்.

சரும வறட்சியை தடுக்கும்:

ஆட்டுப்பாலில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தோல் சவ்வானது கொலஸ்ட்ரால் மற்றும் செலினியத்தால் ஆனது. இவை இரண்டும் ஆட்டுப்பாலில் அதிக அளவில் உள்ளன. இந்த இரு சேர்மங்களும் உடலில் போதுமான அளவு இல்லாவிட்டால் சருமம் விரைவில் உலர்ந்துவிடும். சரும எரிச்சல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். தோல் அழற்சி, சரும வறட்சி போன்ற தோல் பிரச்சினைகளை தடுக்க ஆட்டுப்பால் உதவும்.

இளமையை தக்கவைக்கும்:

ஆட்டுப்பாலில் ஆல்பா-ஹைட்ராக்சில் அமிலங்கள் நிறைந்துள்ளன. இது தோல் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருத்துவ கிரீம்களிலும் உள்ளடங்கி இருக்கிறது. இந்த ஹைட்ராக்சில் அமிலங்கள் வடுக்கள், சரும புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சுருக்கங்களை போக்குவதற்கு உதவுகின்றன. இவை பலர் எதிர்கொள்ளும் பொதுவான தோல் பிரச்சினைகளாகும். ஆட்டுப்பால் இந்த பிரச்சினைகளை போக்க உதவும்.

ஆட்டுப்பாலில் லாக்டிக் அமிலமும் நிறைந்துள்ளது. இது உடலில் படிந்திருக்கும் இறந்த சருமத்தின் மேல் அடுக்கை அகற்ற உதவுகிறது. மேலும் இளமை தோற்றத்தை பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கவும் உதவும். சருமத்தை மேம்படுத்தவும், மென்மையான சருமத்தை பேணவும் வழிவகுக்கும்.

முகப்பருக்களை தடுக்கும்:

முகப்பரு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கியமான தோல் பிரச்சினையாகும். ஆட்டு பால் சோப் அல்லது ஆட்டு பால் கிளீன்சர் போன்ற சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தலாம். இவை சருமத்தில் அடைபட்டிருக்கும் துளைகளைத் திறந்து, அதிகப்படியான எண்ணெய்யை வெளியிட உதவும். அதன் மூலம் முகப்பருக்கள் மீண்டும் தோன்றுவதை தடுத்துவிடலாம்.

பலருக்கும் தோல் வகை மாறுபடும். சிலருக்கு முகப்பரு பாதிப்பு கடுமையாக இருக்கும். அதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஆட்டுப்பால் சருமத்தில் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் சரும நிபுணரின் ஆலோசனை பெற்று மருத்துவ சிகிச்சையுடன் ஆட்டுபாலையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

வறட்சியை நீக்கும்:

சருமம் உலர்வடைவது இயல்பானது. குளிர்காலத்தில் இந்த பிரச்சினை அதிகரிக்கும். தோலில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் போது உதடுகள், முகம், கைகள் மற்றும் முடி போன்ற பகுதிகளில் அடிக்கடி வறட்சி ஏற்படலாம். ஆட்டுப்பாலை வறட்சி ஏற்படும் பகுதிகளில் தடவுவது பயனுள்ள தீர்வாக அமையும். ஆட்டு பாலில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும், தக்க வைக்கவும் உதவும்.

நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்:

சருமத்தில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை சருமத்தை பராமரிக்க உதவுகின்றன. ஆட்டு பால் இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக் களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஆட்டு பாலை பயன்படுத்துபவர்களுக்கு தோல் பிரச்சினைகள் குறைவாக இருக்கும்.

மேலும் ஆட்டுப்பால் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றினாலும், இயற்கை கொழுப்பு களை வெளியேற்றாது. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. ஆட்டு பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் உடலில் நுழையும் நுண் கிருமிகளுக்கு எதிராக அழற்சி எதிர்ப்பு விளைவை மேம்படுத்தும். ஆரோக்கியமான சருமத்தை தக்கவைப்பதற்கு ஆட்டு பால் சோப்பையும் பயன்படுத்தலாம்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting