சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம் செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும்.
தினமும் குளிப்பவர்களுக்கு, குளியல் என்பது ஒரு சாதாரண விஷயமாகவே தெரியும். ஆனால் ஆயுர்வேத மருத்துவம் குளியலை உடலுக்கு தேவையான முக்கியமான விஷயமாக குறிப்பிடுகிறது. எந்த நீரில், எப்படி, எந்த நேரத்தில் குளிக்கவேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குகிறது.
கோடை காலம் உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் காலமாகும். அதனால் உடல் எதிர்கொள்ளும் அசவுகரியங்களை ஓரளவு கட்டுப்படுத்த குளியல் உதவுகிறது. அதோடு உடலின் புறப்பகுதியில் உள்ள அழுக்கை போக்கவும் துணைபுரிகிறது.
எப்போது குளிக்க வேண்டும்?
காலையில் குளிப்பது மிக நல்லது. காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்து வியர்வை வெளிப்பட்ட உடலோடு குளிக்கவேண்டும். காலை உணவுக்கு முன்பாக குளித்திடுவது சரியானது. அதிக பசியோடு இருக்கும்போதும், சாப்பிட்ட உடனேயும் குளிப்பது உடலுக்கு ஏற்றதல்ல. காலையில் தலைக்கு குளிப்பதும், இரவில் தலைக்கு கீழ் கழுவுவதும் உஷ்ணத்தை வெளியேற்றும் வழிமுறையாகும்.
தினமும் உடலைக் கழுவும் நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து எடுத்த சாறு சேருங்கள். கோடை காலத்தில் அது உடலுக்கு உற்சாகத்தை தரும். சரும நோய்களும் அகலும். வெட்டி வேர், சந்தனம் மற்றும் துளசி, வேப்பிலை போன்றவைகளை கலந்த நீரிலும் குளிக்கலாம்.
எப்படி குளிக்கவேண்டும்?
தலைக்கு குளிக்கும்போது முதலில் தலையில்தான் தண்ணீரை ஊற்றவேண்டும். சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம் செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும். குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, பிடித்தமான எண்ணெய்யை உடலில் தேய்த்துவிட்டு குளிக்கவேண்டும். அதனால், கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறையும்.
சோப் பயன்படுத்தலாமா?
சோப் பயன்பாடு சருமத்தை வறட்சி்க்குள்ளாக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதனால் தினமும் ஒரு தடவை மட்டும் சோப் பயன்படுத்துங்கள். அதற்கு மாற்றாக பயறு தூள், கடலை மாவு போன்றவைகளை உபயோகிக்கலாம். குளிக்கும்போது பயன்படுத்த ஆயுர்வேத சூரணம் உள்ளது. அதனை பயன்படுத்தலாம். அது எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றது.
தலையில் ஷாம்புவுக்கு பதில் செம்பருத்தி தாழி பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கோடை உஷ்ணத்தால் முடியில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை அது போக்கும். நெல்லிக்காயை உலரவைத்து தயாரித்த தூள், பயறு தூள் போன்றவைகளாலும் கூந்தலை கழுவலாம். உடல் அதிகமாக சூடானாலும் முடி உதிர்தலும், பொடுகு பிரச்சினையும் தோன்றும். கூந்தலை மேற்கண்ட முறையில் பராமரித்தால் அந்த தொல்லைகள் அகலும்.
வெயிலில் செல்லும்போது முகம் கறுத்துப்போகாமல் இருக்க மல்லியை பயன்படுத்தலாம். ஒரு பிடி மல்லியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். கோடைகாலத்தில் பெண்கள் கூந்தல் மற்றும் சரும அழகில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
Follow on social media