நாடொன்றின் வலுவான ஜனநாயகக் கட்டமைப்பு முறையொன்றில் எவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வியெழுப்பியுள்ளது.
அத்தோடு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையை சட்டவிவகாரமாக நோக்காது, அரசியல் பிரச்சினையொன்றாக அணுகுவது அவசியமாகும் என்றும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் அமைதிவழி கவனயீர்ப்புப்பேரணியொன்று நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டில் முடிவிற்கு வந்த போரின் போது படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் சுமார் 10 வருடகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் இப்பிரச்சினைக்கு இதுவரையில் இறுதித்தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அமைதிப்பேரணியைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளது.
இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையை சட்டவிவகாரமாக நோக்காது, அரசியல் பிரச்சினையொன்றாக அணுகுவது அவசியமாகும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow on social media