கதாநாயகனுக்கு இணையான சம்பளம் கேட்க்கும் ஓவியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

திரைப்படத்துறையில் கதாநாயகர்களுக்கு இணையாகக் கதாநாயகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என சேலத்தில் நடிகை ஓவியா பேட்டியளித்துள்ளார்.
சேலத்தில் உள்ள ஏவிஎஸ் தனியார் கல்லூரியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகை ஓவியா கலந்து கொண்டார். ஆண்டு விழாவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கல்லூரி நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டினார் ஓவியா.

ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு மத்தியில் பல்வேறு திரைப்படப் பாடல்களுக்கு ஓவியா நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாட்டுக்கு அவர் நடனமாடினார்.

பிறகு, செய்தியாளர்களிடம் ஓவியா பேசியதாவது:
கேரளாவில் இருந்த வந்த எனக்கு இங்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் கிடைப்பது பெரிய விஷயம். எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும். தமிழ் மக்களின் அன்பினால் தான் இங்கு நான் உள்ளேன்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எவ்வாறு மற்றவரிடம் பழகவேண்டும் என்பது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் வீட்டிலேயே குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். நல்லது எது கெட்டது எது என்பதைக் குழந்தைகளுக்கு வீட்டில்தான் சொல்லிக் கொடுக்கவேண்டும். யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிப்பது அவசியம்.

எந்த நடிகருடனும் நடிக்க நான் தயார். இவருடன் தான் நடிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை. இன்றைய காலகட்டத்தில் திரைப்படத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன, அதற்கேற்ப கதைகளும் மிகவும் கவனத்துடன் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. திரைப்படத்துறையில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்தும் மரியாதையும் நடிகைகளுக்கும் கொடுக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் கூட ஆணும் பெண்ணும் சமம் என்கிற நிலை இல்லாதது வருத்தம் அளிக்கிறது. கதாநாயகனுக்கு இணையான சம்பளம் கதாநாயகிக்கும் கிடைக்க வேண்டும். நாளை என்பது இல்லை, இன்றைக்கு நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நிச்சயம் என்றார்.
விழாவில் கல்லூரியின் தலைவர் கைலாசம், தாளாளர் ராஜநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Follow on social media
CALL NOW

Leave a Reply