அமெரிக்காவில் கருப்பின வாலிபர் சுடப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் கடந்த மே மாதம் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்துக்கொன்ற சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விஸ்கான்சின் மாகாணம், கெனோஷா நகரில் கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக்கை (வயது 29) போலீசார் 7 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் மாபெரும் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.
ஜேக்கப் பிளேக், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்; இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கெனோஷா நகரில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் போராட்டம் காரணமாக விஸ்கான்சின் மாகாணத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் அங்கு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த அங்கு கூடுதல் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று முன்தினம் இரவு கெனோஷா நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு உள்ள கோர்ட்டு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களையும், வெடி பொருட்களையும் வீசி எறிந்தனர். மேலும் பொது கட்டிடங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.
Follow on social media