மனித உடலில் கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கும் என டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று புதிதான ஒன்று. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றளவும் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும், பல்துறை மருத்துவர்களாலும் நடத்தப்பட்டுதான், அந்த வைரஸ் பற்றிய புதிய தகவல்கள், உலகுக்கு வந்தவண்ணமாக உள்ளன.
இப்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கும், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் மார்பு தொடர்பான அறிகுறிகளுடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாகவும் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நிதி ஆயோக் ஒத்துழைப்புடன் நடைபெறுகிற வாராந்திர தேசிய மருத்துவ கிராண்ட் ரவுண்ட்ஸ் கலந்தாலோசனையின்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் எம்.பி.பத்ம ஸ்ரீவஸ்தவா, இதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் அம்புஜ் ராய், மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் ஆகியோர் கலந்து கொண்டு இது தொடர்பான கருத்துகளை எடுத்து வைத்தனர்.
அப்போது டாக்டர் ரன்தீப் குலேரியா கூறிய கருத்துகள் இவை-
“கடந்த 8 மாதங்களில் கொரோனா வைரஸ் பற்றிய நிறைய கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப உத்திகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு வைரஸ் நிமோனியா என நாம் நினைத்ததில் இருந்து நுரையீரலுக்கு அப்பாலும் கொரோனாவால் பல வெளிப்பாடுகள் உள்ளன. இது பல கூடுதல் நுரையீரல் வெளிப்பாடுகளை ஏற்படுத்துகிறது. அடிப்படையில் இந்த வைரஸ் ‘ஏசிஇ2’ ஏற்பிகள் மூலம் செல்களுக்குள் நுழைகிறது என்பதையே இது அடிப்படையாக கொண்டது. அவை மேல் காற்றுப்பாதைகள், நுரையீரல்களில் ஏராளமாக இருந்தாலும், பல உறுப்புகளிலும் உள்ளன. இதனால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
இப்படி பல நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
பெரும்பாலான நுரையீரல் வெளிப்பாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. என்றாலும், கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் நுரையீரல் வெளிப்பாடுகளுடன் இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
இந்த தொற்றுநோயின்போது, டாக்டர்களாகிய நாங்கள் எப்போது நோயாளியை சந்தேகிக்க வேண்டும், சிகிச்சை தர வேண்டும் அல்லது தனிமைப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் அவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சையை அளிக்க முடியும்” என்கிறார் டாக்டர் ரன்தீப் குலேரியா.
இந்த கலந்தாலோசனையின்போது, மருத்துவ நிபுணர்கள், கொரோனா அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளுடன் வந்த பலருக்கு பக்கவாதம், இதயத்தில் அடைப்புகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான வெளிப்பாடுகள் இருந்ததையும் எடுத்துக்கூறினர்.
மருத்துவ துறை இணை பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் கூறும்போது, “ஆரம்பத்தில் கொரோனா, வைரஸ் நிமோனியாவாக தொடங்கியவை. இப்போது அது பல அமைப்பு நோயாக மாறி இருக்கிறது” என்கிறார். மேலும், சுவாச அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே வைரஸ் தொற்று லேசாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறதா, கடுமையானதாக இருக்கிறதா என்பதை வகைப்படுத்துவதை, மற்ற உறுப்பு தொடர்புகளுடன் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
35 வயதான ஒருவர் தலைவலி மற்றும் வாந்தியுடன் வந்ததாகவும், ஆனால் அவர் ‘கார்டிகல் வெயின் த்ரோம்போசிஸ்’ பிரச்சினையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதையும் கண்டறிந்ததாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதைய வழிகாட்டும் நெறிமுறைகள்படி பார்த்தால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதுமில்லை என கூறினார்.
டாக்டர் எம்.பி.பத்ம ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “சில நோயாளிகளில் மூளை சம்பந்தப்பட்டிருக்கிறது. அது ரத்த உறைதலுக்கு வழிநடத்தும். பக்கவாதம் ஏற்படலாம் அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தலாம். என்செபலிடிஸ் (மூளை வீக்கம்) அல்லது பிற சிக்கல்களுக்கு வழிநடத்தவும் கூடும்” என சுட்டிக்காட்டினார்.
டாக்டர் அம்புஜ் ராய், மிக குறைந்த துடிப்பு விகிதத்துடன் வந்த ஒரு நோயாளி பற்றி கூறினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, இதயத்துடிப்பை மேம்படுத்த சில மருந்துகள் அளிக்கப்பட்டனவாம். வழக்கமாக அப்படிப்பட்டவர்களுக்கு பேஸ்மேக்கர் வைப்பது உண்டு. ஆனால் இந்த பிரச்சினை, கொரோனா வைரசால்தான் என உணர்ந்ததால், பேஸ்மேக்கர் வைக்கப்படவில்லை. மருத்துவ சிகிச்சை மூலமே அந்த நோயாளியின் இதயத்துடிப்பு படிப்படியாக மேம்படுத்தப்பட்டதாம்.
சில நேரங்களில், இதயத்தின் மின்துடிப்பு அமைப்பு, கொரோனாவால் பாதிக்கப்படலாம், இது சுய வரம்புக்கு உட்பட்டது. காலப்போக்கில் மேம்படுகிறது. எனவே வழக்கமாக நோயாளிகளுக்கு தேவைப்படுகிற பேஸ்மேக்கர் இந்த தருணத்தில் தேவைப்படுவதில்லை. இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் சான்றகள் தேவை என்கிறார் டாக்டர் அம்புஜ்ராய்.
இப்படி பல சிக்கல்களுக்கு வழிநடத்தக்கூடிய கொரோனா நம்மை நெருங்காமல் நாம் விவேகமாக தற்காத்துக்கொள்வதுதான் நல்லது.
Follow on social media