அரசியலுக்கு விடை கொடுத்த ஆர். சம்பந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் பூதவுடல் இன்று (01) பொரள்ளையில் உள்ள தனியார் மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பொரள்ளை A.F. Raymond இல் நாளை (02) காலை 9 மணியில் இருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன் பின்னர் புதன்கிழமை (03) மதியம் பாராளுமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே இருந்து அன்னாரின் பூதவுடல் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்படும்.

கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) இரவு காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 91.

அனைவராலும் ஆர். சம்பந்தன் என அறியப்பட்ட இராஜவரோதயம் சம்பந்தன் 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பிறந்தவர்.

யாழ்ப்பாணம் புனித பெட்ரிக் கல்லூரியில் அடிப்படைக் கல்வியைப் பயின்ற இவர், மேலும் பல பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.

தொழில் ரீதியாக சட்டத்தரணியான இவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதன்படி, 1977 முதல் 1983 வரையிலும், 1997 முதல் 2000 வரையிலும், 2001 முதல் இறக்கும் வரையிலும் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது 3 வருட காலத்திற்கு ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிய ஆர். சம்பந்தன் இந்நாட்டின் தமிழ் அரசியல் ஒரு முக்கிய நபராக கருதப்படுகிறார்.

இதற்கிடையில், ஆர். சம்பந்தனின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply