தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
தலைமன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண்டும் நேற்று வியாழக்கிழமை (18) மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் அழைக்கப்பட்டு சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம் பெற்றது.
இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
நடைபெற்ற இவ் அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நீதவான், முதலியார்,ஆராய்ச்சி மற்றும் இவ் வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில் இச் சிறுமிகள் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
கடந்த 11.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை தலைமன்னார் கிராம பகுதியில் சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வேனில் சொக்கிலேற் பிஸ்கட் விற்பனைக்காக சென்றதாக கூறப்படும் இருவர் மூன்று சிறுமிகளுக்கு சொக்கிலேற் தருவதாக அழைத்து அவர்களை கடத்த முற்பட்டதாக தெரிவித்து இவர்களை அக்கிராம மக்கள் பிடித்து தலைமன்னார் பொலிசில் ஒப்படைத்திருந்திருந்தனர் .
சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன்,அர்ஜுன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்..
இச் சந்தேக நபர்களை எதிர்வரும் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
Follow on social media