அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் இன்று (01) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக நுவரெலியாவை சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக பொலிஸ் படையணிகள் நுவரெலியாவிற்கு வரவழைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் தனது ஆதரவாளர்கள் குழுவுடன் நுவரெலியாவில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு சென்று நிர்வாக குழுவினரை தடுத்து வைத்தனர்.
தோட்ட தொழிலாளர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டதிற்கு எதிராக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக தோட்ட நிர்வாகம், நுவரெலியா பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் இன்று நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் இது தொடர்பில் கலந்துரையாட பொலிஸ் நிலையத்திற்குள் வருமாறு நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அமைச்சர் அதனை நிராகரித்துள்ளார்.
பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு உள்ளே சென்ற அமைச்சர், உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டு வெளியில் வந்து ஆதரவாளர்களிடம் தோட்ட நிர்வாகம் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் எதிரான முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
அமைச்சர் இவ்வாறு கூறியதையடுத்து ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Follow on social media