லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான குறித்த பெண், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
அவர் நேற்று (26) லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது கைப்பையில் சுமார் 14 இலட்சத்து 23,500 ரூபா பெறுமதியான 2,700 ஸ்டெர்லிங் பவுண், 02 ஆப்பிள் கைத்தொலைபேசிகள் மற்றும் 02 செம்சுங் கைத்தொலைபேசிகள் இருந்துள்ளன.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை தொலைந்து போனது, இது குறித்து அந்த பெண் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
விமானத்தில் சோதனை நடத்தப்பட்டாலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர், விமானத்தின் விமானி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை விமான சேவை விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், இலங்கை விமான சேவை விசாரணை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருடன் இணைந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகளையும் அவர்களது பயணப் பொதிகளையும் முழுமையாக சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது இலங்கை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடாவில் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான 60 வயதுடைய நபரிடம் இருந்து காணாமல் போன கைப்பை மீட்கப்பட்டுள்ளது.
அப்போதும் அவர் திருடப்பட்ட ஸ்ரேலிங் பவுண்ஸை பயன்படுத்தி விமானத்தில் விற்கப்பட்ட 06 விஸ்கி போத்தல்கள் மற்றும் 03 வாசனை திரவிய போத்தல்களை வாங்கியுள்ளார்.
மீதமிருந்த ஸ்ரேலிங் பவுண்ஸ் மற்றும் மொபைல் போன்களும் கைப்பையில் காணப்பட்டன.
இதனடிப்படையில் சந்தேகத்திற்குரிய பயணி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Follow on social media