யாழிலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து தீக்கிரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளிய கரிகெட்டப் பகுதியில் இன்று அதிகாலை திடீரெனத் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது.

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஈஸ்வரன் பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசுப் பயணிகள் போக்குவரத்துப் பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்தப் பேருந்து கடந்த 29ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

பேருந்தில் தீப்பிடித்த போது, பேருந்தில் 43 பயணிகள் இருந்ததாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பேருந்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து தீப்பிடித்ததில் ஒரு சில பயணிகளின் பொதிகள் மட்டுமே எரிந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கு முன்னர் புத்தளத்தை அண்மித்த பகுதியில் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக பஸ் வண்டியை நிறுத்திய போது சாரதி பேருந்தை சோதனையிட்ட போதும் விபத்துக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

பேருந்து தீப்பிடித்ததையடுத்து, புத்தளம் நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பாலாவி விமானப்படை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.

சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting